காற்று தந்த வளைவுப் பாறைகள்!
அமெரிக்காவில் யூட்டா என்ற ஒரு மாகாணம் உள்ளது. இங்கு 'ஆர்ச்சஸ் நேஷனல் பூங்கா' மிகப் பிரபலம். கொலராடோ ஆறு அமைந்துள்ள இடத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இப்பூங்கா. இந்தப் பூங்காவில் அமைந்துள்ள பாறைகள் இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கபுரி. இந்த இடத்தைப் பாறை வளைவு தேசம் என்றே அவர்கள் அழைக்கிறார்கள். இங்கு அப்படிஎன்ன சிறப்பு என்றுதானே நினைக்கிறீர்கள்?
ஓங்கி உயர்ந்த பிரமாண்ட மலைகள் உள்ளன. இங்கு திரும்பிய திசையெல்லாம் பாறை வளைவுகள்தான். சுமார் 2000 பாறை வளைவுகள் இங்கு அழகாக அமைந்துள்ளன. ரெயின்போ வளைவு, டெலிகேட் வளைவு, மோப் வளைவு, புரூக்கன் வளைவு என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர். இவற்றைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதே ஆர்ச்சஸ் நேஷனல் பூங்கா.
சரி, இந்தப் பாறை வளைவுகள் எப்படி உருவாகின? இவையெல்லாம் செயற்கையாக உருவாக்கப்பட்டவை அல்ல. இயற்கையாகவே அமைந்தவை. அதாவது, இப்பகுதியில் எப்போதும் காற்று பலமாகவே வீசும். இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு பாறைகள் வளைவுகளாக மாறிவிட்டதாகக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
விதவிதமாகப் பாறை வளைவுகள் இருந்தாலும், அனைவரது மனதையும் கொள்ளை கொண்டது என்னவோ டெலிகேட் வளைவுதான். இதற்கு 'எண்டிராடா' என்று இன்னொரு பெயரும் உண்டு. 52 அடி உயரமுள்ள இந்த வளைவு, மலையின் உச்சியில் அமைந்துள்ளது. அந்த வளைவில் இருந்து பள்ளத்தாக்கைப் பார்த்தால் பரவசமான அனுபவம் கிடைக்குமாம்.
இந்தப் பாறை வளைவுகளை 'த சாப்ஸ்' என்று செல்லமாக அழைக்கின்றனர் அமெரிக்கர்கள். காற்று வேகம் காரணமாக, பாறை வளைவுகள் மண் அரிப்பால் பாதிக்கப்படலாம் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானிகள் எச்சரிக்கை மணி அடித்தனர். உடனே அவற்றைப் பாதுகாக்க பிளாஸ்டிக் கோட்டிங் கொடுத்து விட்டது பூங்கா நிர்வாகம்.
-- டி. கர்த்திக். மாயா பஜார்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், மே 7, 2014.
No comments:
Post a Comment