Wednesday, September 28, 2016

மீட்புப் பணி ?

"சமீபத்தில் படித்ததில் உங்களின் மனதை உலுக்கிய செய்தி?"
"கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் சூழிக்கெரே கிராமத்தில் அனுமந்தா கட்டி என்கிற விவசாயியின் ஆறு வயது மகன் திம்மண்ணா, வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது 300 அடி ஆழ்குழாய்க் கிணற்றில் விழுந்துவிட்டான். 160 வது அடியில் திம்மண்ணா சிக்கிக்கொள்ள, பெற்றோர் பதறித் துடித்தனர். தீயணைப்புப் பிரிவினரும், ஆழ்குழாய்க் கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்பதற்கான சிறப்பு நிபுணர்களும் வந்து இரவுபகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கிணற்றின் பக்கவாட்டில் பெரும் பள்ளம் தோண்டப்பட்டு வேலை. ஒன்று, இரண்டு, மூன்று... என நாட்கள் கடந்தன. இனியும் மகனை உயிரோடு மீட்க முடியாது என்பது அனுமந்தா கட்டிக்குப் புரிந்தது.
'அய்யா... தயவுசெய்து தோண்டுவதை நிறுத்துங்கள். இதுவரை தோண்டியதே பெரும் குளம்போல ஆகிவிட்டது. நான் இன்னும் இரண்டு பெண் பிள்ளைகளை வைத்திருக்கிறேன். இந்த நிலத்தில் விவசாயம் செய்துதான் அவர்களைக் காப்பாற்ற
வேண்டும். இப்படித் தோண்டிக்கொண்டே போனால் நிலத்தைச் சமப்படுத்த மேலும் பல லட்சங்கள் செலவாகும். ஏற்கனவே இந்த விவசாயத்தை நம்பி நான் நிறையக் கடன் வாங்கிவிட்டேன். கரும்புப் பயிருக்கு அதிகத் தண்ணீர் தேவை. அடுத்தடுத்து ஆறு போர்வெல்கள் போட்டேன். எதிலுமே தண்ணீர் இல்லை. 17 லட்சம் ரூபாய் கடன் ஆனதுதான் மிச்சம். இப்போது இந்தக் குழியை அடைக்க மேலும் கடன் வாங்க வேண்டும். என் பையன் உயிரோடு வந்தால் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், இதற்கு மேலும் அவனை உயிருடன் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது. இருக்கும் பிள்ளைகளைக் காப்பாற்ற, தோண்டுவதை உடனே நிறுத்துங்கள்' என்று அவர் விடுத்த வேண்டுகோள், கேட்போரின் நெஞ்சத்தை உருக வைத்தது. ஆனால், மீட்புப் பணியை இடையில் நிறுத்த முடியாது என்பதால், தீயணைப்புத் துறையினர் முழுமையாகத் தோண்டித்தான் முடித்தனர்.
180 மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு, பையனின் சடலம் அனுமந்தா கட்டியிடம் தரப்பட்டது. இப்போது அவரது தோட்டத்தில் பெரும் மண் மேடும், குளம் போன்ற பள்ளமும் காணப்படுகின்றன. நிர்க்கதியில் நிற்கிறார் அனுமந்தா கட்டி !"
-- சம்பத்குமாரி, திருச்சி.
-- நானே கேள்வி...நானே பதில் !
-- ஆனந்த விகடன். 3- 8- 2014.

No comments: