கன்னிமாரா நூலகம் !
05-12-1896 .
இந்திய நூலகங்களில் தனிச்சிறப்பு பெற்ற சென்னை கன்னிமாரா நூலகம் 1896-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது .
இங்கிலாந்தில் இந்திய நிர்வாக படிப்பான ஐ.சி.எஸ்.பயிற்சி தரும் ஹேய்ல்பரி கல்லூரியில் ஏராளமான புத்தகங்கள் தேங்கி கிடந்தன . அவற்றை இந்தியாவுக்கு அனுப்பலாம் என்று கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது . அதன்படி அனுப்பப்பட்ட புத்தகங்களை கொண்டு சென்னைக்கு உடனடி தேவையாக இருந்த பொது நூலகம் அமைக்கலாம் என்று சென்னை மாகாண கவர்னர் கன்னிமாரா ,( பார்த்திபன் வளாகத்தில் ) முடிவுசெய்தார் .
கவர்னர் மாளிகை தலைமை இஞ்சினியர் இர்வின் வடிவமைப்பில் புதிய கட்டிடம் எழுந்தது .கட்டுமான பணிகளுக்கு பொறுப்பாளராக கேப்டன் மிச்செல் என்பவர் நியமிக்கப்பட்டார் . நூலகத்தின் முன்னோடி என்று அவரையே கூறுகின்றனர் .
1896-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி அப்போதைய சென்னை மாகாண கவர்னர் சர் ஆர்தர் எலிபாங்க் ஹேவலாக் நூலகத்தை திறந்து வைத்தார் .நூலகம் தோன்ற காரணமாக இருந்த கன்னிமாரா பெயரே நூலகத்துக்கும் சூட்டுவதாக ஹேவலாக் அறிவித்தார் .
இந்தியாவில் உள்ள 4 தேசிய சேமிப்பு நூலகங்களில் கன்னிமாராவும் ஒன்று .ஐநா சபையும் கன்னிமாரா நூலகத்தை தனது சேமிப்பு மையமாக பயன்படுத்துகிறது .
--தினமலர் . ( 05-12-2008 ) .
ஞானவிளக்கு .
அரவிந்தர் , ( 15-08-1872 -- 05 -12-1950 ).
புதுச்சேரியிலிருந்து ஞான ஒளி வீசி வந்த தீபம் .
1927-ம் ஆண்டு முதல்தான் ஸ்ரீஅரவிந்தர் யோகியானார் .அந்த நாள் முதல் அதே ஆசிரமக் கட்டடத்தில் வசித்துவந்தார் . இவருடைய திவ்ய ஞான ஒளியோ உலகெங்கும் பரவி வந்திருக்கிறது .
இந்த ஞான யோகிக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 -ம் தேதியோடு 136 - வது ஜன்ம தினம் பூர்த்தியாகிறது .ஆனால் , இவர் தந்த ஞானத்திற்கு வயதும் மூப்பும் உண்டா ?
அரவிந்தர் , 'வந்தே மாதரம் ' என்ற பத்திரிகையின் ஆசிரியப் பிரதமராக வீற்றிருந்து , சொற்களுக்கு வெடிகுண்டுகளின் வேகத்தையும் சக்தியையும் ஊட்டினார் .
இவர் அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு விஷயமாகத்தான் முதன் முதல் கைதியானார் . சிறையில் ஒரு தனி அறையிலே இவரை அடைத்து வைத்தார்கள் . அந்த சந்தர்ப்பத்தை கீதை , உபநிஷதம் , வேதம் என்ற இந்திய ஞானப் பொக்கிஷத்தை மதிப்பிடப் பயன்படுத்திக்கொண்டார் . அதன் பயனாக , தேசபக்த ஞானியாக வளர்ந்தோங்கி உலகத்திற்கே அருள் நிழல் வழங்க முன் வந்தார் .
இவ்விதமாக , இந்த உலகின் இருள் நீங்கி வந்துதித்த அரவிந்த ஞான தீபம் அணைந்து போக முடியுமா ? சூட்சுமமாக இன்னும் பிரகாசிக்கும் , மேன்மேலும் பிரகாசிக்கும் என்பது திண்ணம் .
--ஆனந்தவிகடன் . ( 10-12-2008 ) .
1 comment:
அருமையான தகவல்! வாழ்த்துக்கள்!
Post a Comment