உலகம் முழுவதுமே கார், பைக்குகளுக்கு பதிலாக சைக்கிள்களை பயன்படுத்தும் திட்டம் அதிகரித்து வருகிறது . இதன்மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் . ஒன்று, சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதில்லை . இரண்டு, உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதால் மரணம் நெருங்குவதில்லை . ஒரே ஒரு நகரில் மட்டும் ஆண்டுக்கு 9000 டன் நச்சு வாயு வெளிப்படுவது தடுக்கப்பட்டுள்ளது . ஆண்டுக்கு 12 பேரின் இறப்பும் தடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது .
லண்டனின் போரீஸ் பைக்ஸ் சைக்கிள் திட்டம் மிகவும் பிரபலம் . 400 ரயில் நிலையங்களில் உள்ள 6 ஆயிரம் சைக்கிள்களை வாடகைக்கு விடுகிறார்கள் . மெட்ரோ ரயிலில் பயணம் செய்து இறங்கியபிறகு, அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல, இந்த சைக்கிள்களை உறூப்பினர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் . வேலையை முடித்த பிறகு வேறு எந்த ரயில் நிலையம் பக்கமோ அங்கு விட்டு விடலாம் . இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது . இதேபோன்ற திட்டம்தான் ஸ்பெயின் பார்சலோனாவில் இயங்கி வருகிறது . 1.82 லட்சம் உறுப்பினர்கள் . சராசரியாக ஒவ்வொரு உறுப்பினரும் தினமும் 3 கி.மீ. வரை சைக்கிளை ஓட்டுகிறார் .அதாவது 14 நிமிடங்கள் . இதனால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிடுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள் . சைக்கிள் திட்டத்தால் இந்த நகரில் ஆண்டுக்கு 9 ஆயிரம் டன் கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது . சைக்கிள் ஓட்டுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிப்பது, சாலை விபத்துக்கள் குறைந்திருப்பது மற்றும் காற்று மாசுபடுவது குறைவது ஆகியவற்றால் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது . அதாவது மொத்தத்தில் ஆண்டுக்கு 12 பேர் இறப்பது தடுக்கப்பட்டுள்ளது என்கிறது ஆய்வு .
ஒவ்வொருவரும் வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது . அதாவது வாரத்துக்கு 5 நாட்களில் தினமும் 30 நிமிட நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓடுவது அவசியம் என்கிறது . சைக்கிள் திட்டத்தால் இது சாத்தியமாகிறது . அனைத்து பெரிய நகரங்களிலும் காருக்கு பதிலாக சைக்கிள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தவும் இதுபோல் சைக்கிள் ஷேரிங் திட்டத்தைக் கொண்டு வருவதும் அவசியம் . இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறைந்து, மக்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
--- தினகரன் தலையங்கம் . ஆகஸ்ட் 8 , 2011 .
--- நாளிதழ் உதவி :P. சம்பத் ஐயர் , திருநள்ளாறு .
No comments:
Post a Comment