Tuesday, August 2, 2011
கலவியல் தேர்வு ( Sexual selection ) .
ஆண், பெண் இருவருமே கலவியல் பங்கேற்பில் ஈடுபட்டாலும்கூட , இதில் பெண்ணின் பங்குதான் அதிகம் . கலவியல் செல்கள் என்பவை இரண்டு பாலினருக்குமே பொது . இரண்டிலுமே 23 குரோமோசோம்கள்தான் இருக்கின்றன என்றாலும், இவற்றின் எண்ணிக்கையிலும் வடிவமைப்பிலும் எக்கச்சக்க வித்தியாசங்கள் . ஓர் ஆண், ஒரு நாளைக்குக் கிட்டதட்ட 80 முதல் 100 மில்லியன் வரை விந்து அணுக்களை உற்பத்தி செய்கிறான் . அவன் வயதுக்கு வந்த அந்தக் கணம் முதல், அவன் வாழ்நாள் முழுவதுமே இப்படி மில்லியன் கணக்கில் விந்து அணுக்களை உற்பத்தி செய்ய வல்லவன் . ஆனால், பெண், ஒரு மாதத்துக்கு ஒரே ஒரு கரு முட்டையைத்தான் உற்பத்தி செய்கிறாள் . அதுவும் வயதுக்கு வந்த பிறகு ஆரம்பித்து, மெனோபாஸ் ஆகும் வரை . கூட்டிக் கழித்துப்பார்த்தால், கிட்டதட்ட 30 -- 35 ஆண்டுகளுக்கு மட்டும் . வருடத்துக்கு 12 கரு முட்டைகள் என்றால், தன் வாழ்நாள் முழுவதுமே சேர்த்து ஒரு பெண் உற்பத்தி செய்வது, மொத்தமே சுமார் 400 கரு முட்டைகளைத்தான் . கரு முட்டையின் சைஸையும் விந்து அணுவின் சைஸையும் ஒப்பிட்டுப் பார்த்தால், விந்து அணு ஒரு சின்ன புள்ளி மாதிரியும் கரு முட்டை அதைவிட 1,000 மடங்கு பெரிதாக, ஓர் உலக உருண்டை மாதிரியும் இருப்பதைக் காணலாம் . காரணம், விந்து அணுவில் வெறும் 23 குரோமோசோம்களும் அவற்றை நீந்தவைக்க ஒரு வாலும், அந்த வாலுக்கு நீந்தும் சக்தியைத் தர ஒரு குட்டி இன்ஜினும்தான் உள்ளன . கரு முட்டையிலும் அதே 23 குரோமோசோம்கள் என்றாலும், அந்த குரோமோசோம்களைச் சுற்றிலும் சக்தி கொடுக்க நிறைய கொழுப்பும் புரதமும் திரண்டு இருக்கும் . காரணம், கரு முட்டை என்பது ஒரு சக்தி பிழம்பு . கருவுக்கு போஷாக்கு அளிக்க வேண்டிய அளவு எரிபொருளும், ஆற்றலும் அதில் நிறைந்து இருக்கின்றன . Gene economics மரபு அணுப் பொருளாதாரத்தின் அடிப்படையில் பார்த்தால், ஆணின் விந்து அணுவைத் தயாரிக்க அதிக செலவு ஆவது இல்லை . அதனால், ஒரே நாளில் பல மில்லியன் கணக்கில் உற்பத்தி செய்து தள்ள முடியும் . ஆனால், பெண்ணின் கரு முட்டையோ, ரொம்பவே காஸ்ட்லியான ஒரு படைப்பு . அதனால்தான், அது மாதத்துக்கு ஒன்று என்று தயாராகிறது . அதனால், எரிபொருள் இருப்பைவைத்து மதிப்பிட்டால், விந்து அணு மலிவானதாகவும் கரு முட்டை விலை உயர்வானதாகவும் ஆகிவிடுகிறது . ஆணின் விந்து அணுக்களுக்குச் செய்கூலி மிகக் குறைவு . அதனால், அது விரையம் ஆனாலும் பெரிய நஷ்டம் ஏற்படாது . அதனால்தான் ஆண் மிருகங்கள், பெண்ணின் சாயலில் இருக்கும் பிற வஸ்துக்களைக் கண்டாலும், உடனே விந்து அணுக்களை வெளியேற்றிவிடுகின்றன . அதனால், அந்த மிருகத்துக்கு எந்தப் பெரிய இழப்பும் இல்லை . ஆனால், பெண் தயாரிப்பதே மாதத்துக்கு ஒரே ஒரு கரு முட்டை என்பதால், அதை விரையம் செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை . அதனால், பெண் தன் காஸ்ட்லியான முதலீட்டை மிகுந்த எச்சரிக்கையுடனே அணுக வேண்டியிருக்கிறது . --'-உயிர்மொழி ' தொடரில், டாக்டர் ஷாலினி , ஆனந்த விகடன் . 13 . 10 . 10 .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment