Tuesday, April 1, 2014

நாகூர் ஆண்டவர் தர்கா.

  ( சிறப்பு )  
     நாகப்பட்டினம் நகரத்தை ஒட்டி அமைந்திருக்கும் நாகூர் நகரில் உள்ள இந்த நாகூர் ஆண்டவர் தர்கா இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாது சர்வ மதத்தினருக்குமான ஒரு பிரார்த்தனை தலம் என்றே கூறலாம்.
     வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு வரும் கிறிஸ்தவர்களுக்கும், இப்பகுதியிலுள்ள பிற கோயில்களுக்கு வரும் இந்துக்களும் நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு வந்து வணங்காமல் செல்வதில்லை.  வருகிறவர்களின் வாட்டங்களைப் போக்கி நன்மை பயக்கிறார் இங்கு அடங்கியிருக்கும் நாகூர் ஆண்டவர்.
நாகூர் ஆண்டவர் என்பவர் யார்?
      உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியா நகருக்கு அருகில் உள்ள மாணிக்கப்பூர் என்ற ஊரில் சையது ஹசன் குத்தாஸ் - பாத்திமா ஆகியோரின் மகனாக 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்தவராகக் கருதப்படும் ஷாகுல் ஹமீது ஒலியுல்லா என்பவர் தான் தற்போது நாகூர் ஆண்டவராக வழிபடப்படுகிறார்.  வாலிப பருவத்தில் மாணிக்காப்பூரிலிருந்து குவாலியர் சென்று முகம்மது ஹைஸிடம் ஞானதீட்சை பெற்ற ஷாகுல் ஹமீது ஒலியுல்லா பிறகு லாகூர், அரேபியா உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று இறை ஒளி பெற்றார்.
      பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்று இறைப்பிரசங்கம் செய்து தனது இறுதி நாட்களில் தஞ்சை வழியாக நாகூர் வந்தடைந்தவர் பின்னர் இங்கேயே தங்கி பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி 1558-ம் ஆண்டில் மறைந்தார்.  அதன்பிறகு 1559-ம் ஆண்டில் அவர் நினைவாக முதல் கந்தூரி விழா கொண்டாடப்பட்டதாக தர்காவின் வரலாறு கூறுகிறது.
சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்படும் கொடி.
     தர்காவில் போர்த்தப்படும் சால்வை மற்றும் மலர்போர்வை பழநியில் உள்ள ஒரு இந்துகுடும்பத்தினரால் கொண்டு வரப்படுவது என்பதிலிருந்தே மதங்களைக் கடந்த மகோன்னதமான இடம் நாகூர் ஆண்டவர் தர்கா என்பதை உணரமுடியும்.
     பாதுஷா நாயகம் மினாராவில் ஏற்றப்படும் கொடி ஆண்டுதோறும் சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு ஏற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக கொடியை யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.
    நாகூர் தர்காவின் 5 மினாராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள் நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து பெரிய ரதம், சிறிய ரதம், செட்டிப் பல்லக்கு, கப்பல் போன்ற 2 வாகனம் ஆகியவற்றில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு எடுத்துச் செல்லப்படும்.
கந்தூரி விழா...
     நாகூர் ஆண்டவர் தர்காவின் வருடாந்திர பெரிய கந்தூரி விழா ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது.  கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு வைபவம் 11-ம் தேதி அதிகாலை 4-30 மணிக்கு, சந்தனம் பூசும் வைபவமும், கடற்கரைக்கு பீர் ஏகுதலும் நடைபெறும்.  14-ம் தேதி கொடியிறங்குதலுடன் கந்தூரி நிறைவு பெறுகிறது.
-- - 'தி இந்து' நாளிதழ்., திங்கள், மார்ச் 31,2014.  

No comments: