Thursday, October 29, 2009

உறவு முக்கோணம் !

மனோதத்துவ அறிஞர்கள் , மனித உறவுகளில் எழும் சிக்கல்களைப் போக்கும் ஒரு சுலபமான வழியைக் கண்டுபிடித்தார்கள் . அதுதான் உறவு முக்கோணம் .
ஒரு முக்கோண வலையைக் கற்பனை செய்யுங்கள் . இந்த வலையின் ஒவ்வொரு கோணத்தின் நுனியையும் ஒரு மரத்தில் கட்டி இருப்பதாக கற்பனை செய்யுங்கள் . இந்த முக்கோண வலையின் ஒவ்வொரு கோணத்துக்கும் ஒரு பெயர் இடுங்கள் . ஒன்றின் பெயர் அன்பு ; மற்றொன்றின் பெயர் உண்மை ; மூன்றாவதன் பெயர் கருத்துப் பரிமாற்றம் . இதையே ஆங்கிலத்தில் Affinity , Reality , Communication என்று கூறுகிறார்கள் .
இந்த மூன்றும் வலுவாக ஒன்றை ஒன்று பிணைத்து நிற்கும்போது , பிரச்னைகள் எல்லாம் சுமூகமாகத் தீர்க்கப்படுகின்றன . இந்த உறவு முக்கோணம் எப்படிச் செயல்படுகிறது என்று பார்க்கலாம் .
மகன் ஒரு பெண்ணை விரும்புகிறான் . அப்பா எதிர்க்கிறார் . " என்னடா இது ! அவர்கள் சாதி என்ன , நம்ம சாதி என்ன ? அது எப்படி அங்கு போய்ப் பெண் எடுக்க முடியும் ? உனக்குப் புத்தி இருக்கா ? "
என்கிறாள் அம்மா .
இதன் விளைவாக , அப்பாவும் அம்மாவும் பையனுடன் பேசுவது இல்லை . இந்த மூவருக்கும் இடையே இருந்த ஒரே ஒரு தொடர் - கருத்துப் பரிமாற்றம் , எண்ணப்பரிமாற்றம் - பேச்சு - விடுபட்டுப் போக ,
அவரவர்கள் வழியே சரி என்று எண்ணி , அதிலே ஊறிப்போகிறார்கள் .
அதுவே , உறவு முக்கோணத்தை உணர்ந்தவர்கள் என்ன செய்வார்கள் ?
என்ன இருந்தாலும் , " அவன் நம் மகன் , அவனது நன்மைதான் நமது நன்மை " என்று அன்பால் கட்டுப்படுவார்கள் . " கீழ் சாதியாவது , மேல் சாதியாவது ! அவன் யாருடனாவது சந்தோஷமாக இருந்தால் சரிதான் ! இதோ பாருங்க ! அறியாத பிள்ளை அது . அதோடு பேசுங்க . என்ன விஷயம் , யாரு பொண்ணு என்னனு தெரிஞ்சுக்குவோம் . நல்லது கெட்டது எடுத்துச் சொல்லுவோம் ! " என்கிறார் தாய் .
கருத்துப் பரிமாற்றம் சிக்கல்களை அவிழ்க்கிறது . அன்புடன் கூறப்படும் உண்மைக் கருத்துக்கள் , மகனின் எண்ணத்தை மாற்றவும் செய்யலாம் .
--- எம்.எஸ். உதயமூர்த்தி .

No comments: