ஜி.டி. நாயுடு ( 23 - 03 - 1893 --- 04 - 01 - 1974 )
ஒன்றரை ஆண்டுக் காலமாக உள்ளே பூட்டிக் கிடந்த துப்பாக்கி ஒன்று வேலை செய்கிறதா என்று சோதிக்க விரும்பிய ஜி . டி . நாயுடு , ஒரு வாழை மரத்தின் அடிப்பாகத்தில் குறி பார்த்துச் சுட்டார் . குண்டு,வாழை மரத்தைத் துளைத்துக்கொண்டு மறு பக்கம் போய் விழுந்தது .
வாழை மரத்தில் விழுந்த துளை நாயுடுவின் சிந்தனையைத் தூண்டியது . உடனே ரொட்டிகளைக் கொண்டு வரச் சொல்லி , அந்தத் துளையில் அடைத்தார் . மேலும் சில வாழைகளைத் துளைத்து ஒன்றில் சாணம் , இன்னொன்றில் கோமியம் , மற்றொன்றில் மாமிசம் இவற்றைத் திணித்து அந்த வாழை மரங்களின் வளர்ச்சியில் ஏதேனும் மாறுதல் காண்கிறதா என்று கண்காணித்து வந்தார் . மரங்களும் , காய்களும் இரண்டு மடங்கு பெரிதாக வளர்ந்தன . எதேச்சையான ஆராய்ச்சி எதிர்பாராத பலனை அளிக்கவே , நாயுடு தமது ஆராய்ச்சியை மேலும் தொடர்ந்து , ஆரஞ்சு , பப்பாளி , பருத்தி போன்ற செடிகளையும் சோதனைக்கு உள்ளாக்கினார் . அதன் விளைவு : ' உலகிலேயே மிகச் சிறந்த பப்பாளி விளைவிக்கும் செப்பிடு வித்தைக்காரர் நாயுடு என்ற புகழ் அவருக்குக் கிட்டியது . ஜி . டி . நாயுடுவைச் சந்திக்கச் செல்கிறவர்கள் , அவர் தோட்டத்தில் விளையும் பப்பாளியைச் சாப்பிடாமல் தப்ப முடியாது .
பல ஆண்டுகளுக்கு முன் இவரால் கண்டுபிடிக்கப்பட்ட ' எலெக்ட்ரிக் ஸேஃப்டி ரேஸர் ' மேனாட்டு விஞ்ஞானிகள் பலரால் பாராட்டப்பட்டது .
தாவர இயல் , பொறி இயல் , மருத்துவம் , சோதிடம் இவ்வளவையும் அறிந்துள்ள நாயுடுவின் முழுப் பெயர் துரைசாமி . இவரை , ' இலக்கண துரைசாமி ' , ' மருத்துவ துரைசாமி ' , ' சோதிட துரைசாமி ' என்றும் அழைப்பதுண்டு . ஆயினும் சோதிடத்தில் இவருக்குத் துளியும் நம்பிக்கை கிடையாது .
ஜி . டி . நாயுடு ஆங்கிலம் அதிகம் படித்தவரில்லை . ஆனாலும் , பல முறை உலக நாடுகளைச் சுற்றியதன் மூலம் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் , உரையாடவும் அனுபவம் பெற்றுள்ள இவருடைய ஆங்கிலப் புலமையைக் கண்டு வியக்காதவர்களே இல்லை .
1893 - ல் கலங்கல் கிராமத்தில் உழவரின் மகனாகப் பிறந்த இவர் தம்முடைய சலியாத உழைப்பால் உயர்ந்து , தென்னகத்தின் பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார் .
--- ஆனந்தவிகடன் , 10 - 06 - 2009 .
No comments:
Post a Comment