Wednesday, August 3, 2016

ஆங்கிலம் அறிவோமே -- 6

'அசால்டா பேசாதீங்க '
     "நான் எப்பவுமே ரொம்ப plain" என்று பெருமை பொங்கச் சிலர் கூறுவதைக் கேட்டிருக்கிறோம்.  அதாவது அவர் எதையும் மறைத்துப் பேசாதவராக, வெளிப்படையானவராக இருக்கிறாராம்.  ஆனால், plain என்ற ஆங்கில வார்த்தைக்குப் பொருள் 'வெளிப்படையான' என்பது அல்ல. 'எளிமையான அல்லது சாதாரணமான' என்றுதான் இதற்கு அர்த்தம்.  அதாவது ஸ்பெஷலாக எதுவுமில்லாத என்பது போன்ற அர்த்தத்தில், கொஞ்சம் இகழ்வாகக் கூறப்படும் வாக்கியம்.  இது, ( olain தோசை நினைவுக்கு வருகிறதா?).
      plain என்பதற்கு இன்னொரு பொருளும் இருக்கிறது.  கிட்டத்தட்ட மரங்களே இல்லாத பிரம்மாண்டமான, தட்டையான நிலப்பரப்பை plain என்று கூறுவதுண்டு.
     "அவன் அசால்டா ( assault ) பேசினான்" என்று கூறும்போது 'சரளமாக எந்த விதத் தடங்ககலுமின்றிப் பேசினான்' என்கிற அர்த்தத்தில் குறிப்பிடுகிறோம்.
      "அவன் ரொம்ப assault -டா செய்தான்" என்று உங்கள் நண்பரைப் பற்றி உரத்துச் சொல்லாதீர்கள்.  காவல் துறையினர் உங்கள் நண்பரைக் கைதுசெய்துவிடலாம்.  Assasult என்றால் தாக்குதல் என்று அர்த்தம்.  தாக்குதல் என்றால் வார்த்தைகளில் எதிர்கருத்தை அழுத்தமாகக் கூறுவது அல்ல.  உடலளவில் தாக்க வருவது.  சிலசமயம் தாக்குதல் பயத்தை உண்டாக்கும்படி கையசைவோடு வார்த்தைகளும் இருந்தால் அதுவும் assaultதான்.   இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 351-வது பிரிவின்படி இது ஒரு குற்றம்.  இதைப் படித்த பிறகும் "நீங்க சொன்னதை என்னாலே உணர முடியுது.  இது assault ஆன விஷயம் இல்லேன்னு தெரியுது" என்று நீங்கள் சொல்லமாட்டீர்கள் அல்லவா?
     ஆங்கிலத்தில் 'naive' என்று ஒரு வார்த்தை உண்டு.  இப்படி யாரையாவது நீங்கள் குறிப்பிட்டால் அவர் அதற்காகச் சந்தோஷப்படமாட்டார்.  எனென்றால் அனுபவமற்ற, அறிவுத் திறனற்ற ஒருவரைத்தான் அப்படிக் குறிப்பிடுவார்கள்.  ஆனால் இந்த வார்த்தை ஜப்பானில் எப்படியோ சிறப்பான அந்தஸ்தைப் பெற்று விட்டது.  Naive என்ற வார்த்தைக்குப் பொருள் 'மிருதுவான, சிறப்பான' என்றுதான் ஜப்பானியர்கள் கருதுகிறார்கள்.  சொல்லப்போனால் அங்கே தயாரிக்கப்படும் பல பொருட்களின் பெயர்களில் 'Naive' என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கிறது.
-- ஜி.எஸ். சுப்ரமணியன்.  வெற்றிக்கொடி.
--  'தி இந்து' நாளிதழ். திங்கள், மே, 19 , 2014.  

No comments: