Friday, March 20, 2009

' 0 ' சதவீதம் !

பாதாளத்தில் பணவீக்கம் வரலாறு காணாத வீழ்ச்சி.
புதுடில்லி , மார்ச் 20 .
மார்ச் 7 -ம் தேதியுடன் முடிந்த வாரத்திற்கான பணவீக்க அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது .
இதில் முந்தைய வாரத்தைவிட ஒரே மூச்சில் 1.99 சதவீதம் குறைந்து 0.44 சதவீதமாகியுள்ளது . கிட்டத்தட்ட பூஜ்யம் சதவீதத்தையே தொட்டுவிட்டது . இந்தியாவில் இப்போதுள்ள ' மொத்த விலை குறியீடு ' அடிப்படையில் பணவீக்கம் கணக்கிடும் முறை 1995-ல் தொடங்கப்பட்டுள்ளது . அதிலிருந்து பணவீக்கம் எப்பொழுதும் ஒரு சதவீதத்துக்கும் அதிகமாகவே இருந்துள்ளது . இப்போது அது வரலாறு காணாத அளவில் ஒரு சதவீதத்திற்கும் கீழாக குறைந்துள்ளது .
அடுத்த சில வாரங்களில் பணவீக்கம் பூஜ்யத்திற்கும் கீழ் குறையும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர் .
முரண்பாடு ஏன் ?
பணவீக்க வீதம் என்பது விலைவாசியை ஒட்டி அமைய வேண்டும் . அரிசி , பருப்பு போன்ற பெரும்பாலான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் நியாயமாக பணவீக்கமும் உயரவேண்டும் . ஆனால் அது தரைமட்டத்தை தொட்டு நிற்கிறது . இந்தியாவில் பணவீக்கம் கணக்கிட தவறான முறையை பின்பற்றுவதுதான் இந்த முரண்பாட்டுக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் .
' மொத்த விலை குறியீட்டு எண் ' - டபிள்யூபிஐ' அதாவது பொருட்களின் மொத்த விலை அடிப்படையில்தான் இங்கு பணவீக்கம் கணக்கிடப்படுகிறது . இது உண்மையான விலைவாசி நிலவரத்தை பிரதிபலிப்பதில்லை .
என்வே பொருட்கள் நுகர்வோரை அடையும்போது என்ன விலை இருக்கிறதோ அதை வைத்து பணவீக்கத்தை கணக்கிடும் ' நுகர்வோர் விலை குறியீட்டு எண் -- சிபிஐ' முறையை பின்பற்ற வேண்டும் .
முன்னேறிய நாடுகள் இந்த முறையைத்தான் பின்பற்றுகின்றன . என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர் .
டபிள்யூபிஐ முறையிலிருந்து சிபிஐ முறைக்கு மாறுவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது என்று அரசு விளக்கம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது .
--- தினமலர் . 20 - 03 - 2009 .

No comments: