Friday, March 27, 2009

காலனை உதைத்த கால் !

" வெறி கொண்ட காலனை உதைத்த கால் உனது கால் , அதனால் தூக்கி நின்றான் " .
காலனை உதைத்த கால் உமையவளுக்குச் சொந்தமான இடது கால் , அதனால் அதற்கு மதிப்புக் கொடுப்பது போல , நடராஜர் , காலைத் தூக்கி ஆடியபோது , அந்தக் காலைத் தூக்கி ஆடினார் என்று இதற்குப் பொருள் .
கருணையின் வடிவமே உமையவள் . அவளை வணங்கினால் நாம் எல்லா நலன்களும் பெறலாம் . அவள்தான் மதுரையில் மீனாட்சியாகப் பிறக்கிறாள் . மதுரையை ஆண்ட அவள் திக் விஜயம் கிளம்புகிறாள் . பூவுலகில் அவளை எதிர்த்து நிற்பார் யாருமில்லை . எல்லாரும் சரண் அடைந்து விடுகிறார்கள் .
உடனே , மீனாட்சி அஷ்டதிக் பாலகர்கள் மீது பாய்கிறாள் .அவர்களும் , சரணடைகிறார்கள் . கடைசியில் தென் திசைக் காவலனான யமனாவது தன்னை எதிர்த்து நிற்பானா என்று நினைக்கிறாள் .
அவனோ , அவள் காலில் விழுந்து , " தாயே ! எனக்கு உயிர் கொடுத்த உமையவளே ! உன்னை நான் எதிர்த்துப் போரிடலாமா ! அது நீதியாகுமா ! அப்படிப் போட்டாலும் உன்னை நான் வெல்ல முடியுமா ! " என்று கேட்கிறான் .
" நான் உனக்கு உயிர் கொடுத்தேனா ! எப்பொழுது ? " என்று கேட்கிறாள் மீனாட்சி .
" ஏனம்மா ! மார்க்கண்டேயரை மறந்து விட்டாயா ? அவருக்குக் கொடுக்கப்பட்ட பதினாறு வயது ஆயுள் முடிந்துவிட , அவர் உயிரை எடுக்க நானே வந்தேன் . அப்பொழுது , அவர் சிவலிங்கத்தைத் தழுவிக் கொள்ள , நான் அதையும் சேர்த்து என் பாசக் கயிற்றினால் இழுத்தேன் . அதைக் கண்டு கோபம் கொண்ட சிவன் என்னை உதைக்கப் போனார் . பிறர் உயிரை வாங்கும் என் உயிரையே அவர் வாங்கிவிடுவாரோ என்று நடுங்கினேன் . உன்னை மனதார வேண்டிக் கொண்டேன் . அதன் காரணமாக , அவர் என்னை உதைத்த கால் உனது கால் , ஆதலால் நான் பிழைத்தேன் " என்கிறான் யமன் .
இதைக் கேட்டு மீனாட்சி அவன் மீது கருணை கூர்கிறாள் . அந்த கருணைதான் அவளைச் சிவனைச் சந்திக்கச் செய்து , அவனோடு மணம் முடித்து வைக்கிறது .
--- புலவர் சிதம்பரம் சுவாமிநாதன் . வண்ணாரப்பேட்டை சிவாய நம சிந்தனை அரங்கத்தில் , அவர் நிகழ்த்திய " பார்வதி கல்யாண" த்தின் போது . பிப் . 1 . 1990 .

No comments: