Thursday, March 5, 2009

பிரார்த்தனை !

பிரார்த்தனை என்பது மூன்று காரணங்களுக்காகத்தான் செய்யப்படுகிறது .
ஒன்று , அச்சம் . ' எதிரியிடமிருந்து காப்பாற்று , விபத்திலிருந்து காப்பாற்று , நோயிலிருந்து காப்பாற்று ' என்றெல்லாம் பாதுகாப்பு அளிக்கச் சொல்லி வேண்டுவது .
இரண்டாவது , பேராசை ,' எனக்குப் படிப்பு கொடு , கார் கொடு , வீடு கொடு , பதவி உயர்வு கொடு , செல்வம் கொடு ' என்றெல்லாம் விண்ணப்பங்கள் போடுவது .
மூன்றாவது , நன்றி சொல்வது . ' எனக்கு இது அளித்ததற்கு நன்றி , அதைச் செய்து கொடுத்ததற்கு நன்றி ' என்று நன்றி தெரிவிப்பது .
மன்னன் ஒருவன் நகர்வலம் போயிருந்தான் . சாதாரண ஆடைகளுடன் நடைபாடை ஓரம் அமர்ந்திருந்தும் ஆனந்தமாக இருக்கும் ஒரு துறவியைப் பார்த்தான் . " இவ்வளவு குறைவான வளம் இருந்தும் திருப்தியாகக் காணப்படுகிறீர்களே , உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது " என்றான் மன்னன் . " என்னைவிடக் குறைவான செல்வம் கொண்டுள்ள நீ இதைச் சொல்வதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது ." என்றார் துறவி . " என்னது , என் வளம் குறைவா ? எனக்குக் கீழ் 6 தேசங்கள் இருக்கின்றன . 14 குறுநில மன்னர்கள் இருக்கிறார்கள் . உங்களிடம் என்ன இருக்கிறது .? " என்றான் மன்னன் சூடாக . " இந்தப் பூமி , இந்தக் காற்று , வானம் , சூரியன் , நிலவு , அண்டவெளி , இந்தப் பிரபஞ்சம் . ஏன் , அதற்கும் அப்பால் எல்லாமே இருக்கிறது . என்னுள் படைத்தவன் இருக்கிறான் . உன் தேசங்களுக்கு எல்லைகள் இருக்கின்றன . எல்லையில்லாததுக்கு நான் சொந்தக்காரன் ! "
படைத்தவன் உள்ளே இருப்பதை உணர்ந்துவிட்டால் , உங்களுக்குக் கிடைப்பது எல்லாம் அவனுக்குக் கிடைத்ததுதானே . அப்புறம் ஆனந்தம்தான் ஒரே விளைவு

No comments: