Friday, March 13, 2009

ராமபிரான் .

ராமபிரான் ஒருமுறை கங்கையில் குளிக்கச் செல்லும்போது தன் தோளில் இருந்த அம்புராத் துணிகளைக் கழற்றி வைத்தார் . அதில் ஒரே ஒரு அம்புமட்டுமே இருந்தது . அதைப் படுக்க வைத்துச் செல்வது வீரனுக்கு அழகானது அல்ல எனத் தரையில் குத்திவிட்டுச் சென்றார் .
குளித்து முடித்து விட்டுத் திரும்ப அந்த அம்பைத் தரையிலிருந்து பிடுங்கியபோது , ஒரு தவளை ரத்தம் வெளியேற உயிருக்குத் துடிதுடித்துக் கொண்டு அதன் நுனியில் ஒட்டி இருந்தது ! அதைக் கண்ட ராமபிரான் நெஞ்சம் பதைபதைத்து , " தவளையே ! நான் உன்னை அம்பால் குத்தியபோது நீ குரல் கொடுத்திருக்கலாமே ! ஐயோ ! பெரும் தவறு செய்து விட்டேனே ! " எனக் கலங்கினார் .
தவளை கூறியது : " எம்பெருமானே ! எனக்குப் பிறர் தீமை செய்தால் என்னைக் காப்பாற்றிக் கொள்ள உன்னை ' ராமா ! ராமா ! ' என அழைப்பேன் . ஆனால் , அந்த ராமனே இப்போது எனக்குத் தீங்கு செய்யும்போது நான் வேறு யாரைக் கூவி அழைப்பேன் ? " என்றது .
அனுமன் சீதையைக் கண்டு பிடித்தது எப்படி ?
இலங்கையில் சீதையைக் கண்டு விட்டு வரும் அனுமன் " கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால் , " என்று தெரிவித்ததாகக் கம்பன் பாடியிருக்கிறார் .
' கண்களால் கண்டனன் ' என்று சொல்வதில் என்ன விசேஷம் ? அனுமன் மாத்திரமல்ல , யாருமே கண்களால் தானே பார்க்கமுடியும் ? விளக்கம் :
சீதையைத் தேடப் புறப்பட்ட போது சீதையின் வடிவம் எப்படி இருக்கும் என்பது அனுமனுக்குத் தெரியாது . ஆகவே அனுமன் ஒரு காரியம் செய்தார் . மனைவியைப் பிரிந்து வாழும் ( தவிக்கும் ) ராமனின் கண்களை நன்றாகப் பார்த்து வைத்துக் கொண்டார் . அந்த கண்களில் எத்தனை சோகம் தேங்கியிருக்கிறதோ அதே அளவு சோகம் எந்தப் பெண்ணின் கண்களில் இருக்கிறதோ அவள்தான் சீதையாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார் . அவ்வாறே அசோகவனத்தில் சீதையைப் பார்த்ததும் அவள்தான் சீதை என்பதை , அந்தக் கண்களின் சோகத்தால் ' கண்களால் ' -- கண்டு கொண்டார் .
--- குமுதம் . ( 12 - 08 - 1982 ) .

No comments: