Sunday, October 26, 2014

ஐந்தரைக் கிலோவில் தங்கக்கட்டி.

 ஆஸ்திரேலியா கண்டம் இங்கிலாந்தின் கைதிகளுடைய இருப்பிடமாக இருந்தது.  1848ஆம் ஆண்டு அங்கே தங்கம் கிடைப்பதாகத் தெரிய வந்ததும்,  பல ஆங்கிலேயர்கள் அங்கு குடியேறி, தங்கம் தோண்டி எடுப்பதில் முனைப்புக் காட்ட ஆரம்பித்தனர்.  ஏற்கனவே அங்கே இருந்த பிரிட்டிஷ் கைதிகளும் இவ்வாறு தங்கம் எடுத்து, பெரும் செல்வந்தர்களாகத் தாய்நாட்டிற்குத் திரும்பி வந்து வசதியான வாழ்க்கையை மேற்கொண்டனர்.
     ஆஸ்திரேலையாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பல்லாராட் (  Ballarat )  என்ற ஊரில் பெருமளவு தங்கம் தற்போது கிடைத்தது.
     பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கே 2.8 கிலோ எடையுள்ள தங்கக் கட்டி ஒன்று கிடைத்ததாம்.  இப்போது 18.1.2013 அன்று ஒர் அதிஷ்டசாலிக்கு ஐந்தரை கிலோ எடை கொண்ட ஒரே தங்கக் கட்டி கிடைத்திருக்கிறது.  இதன் அளவு 220 மி.மீட்டர், 140 மி.மீட்டர், அகலம் 4.5 மி.மீட்டர்.  இதைப் படத்தில் பார்த்தால் மான் போன்ற மிருகத்தின் தலைபோலத் தோன்றுகிறது.  இந்த அதிஷ்டசாலியின் பெயரை வெளியிடவில்லை.
     இவர் தங்கம் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அறிவிக்கும் ஒரு கருவியை எடுத்துக் கொண்டு சென்று இருக்கிறார்.  அப்போது இலைச்சருகுகள் குவிந்திருந்த ஓரிடத்தில் இக்கருவியில் இருந்து சப்தம் கேட்கத் துவங்கியது.  அவர் அந்த இலைச்சருகுகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தைத் தோண்ட ஆரம்பித்தார்.  அப்போது பளபளவென்று மின்னியவாறு ஏதோ உலோகம் தெரியவும் அந்தப் பொருளை எடுத்துக் கழுவிப் பார்த்தபோது இத்தனை பெரிய தங்கக்கட்டியாக இருக்கவே அப்படியே பிரமித்துப் போய்விட்டார்.  அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை.
     இந்த அளவு எடையுள்ள தங்கத்தின் மார்கெட் விலை 2,82,000 ஆஸ்திரேலியன் டாலர்தான்.  ஆனாலும் இந்த அளவிற்கு ஒரே கட்டித் தங்கமாக இயற்கையாகக் கிடைத்துள்ளதால் இதன் மதிப்பு 3,00,000 டாலருக்கு மேல் இருக்கும் என்கிறார்கள் ,  அமெரிக்க டாலர் மதிப்பு 3,15,000 இருக்குமாம்.
     ' கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் ' என்பார்கள்.  இந்த ஆஸ்திரேலிய அதிர்ஷ்டசாலி விஷயத்தில்  'கொடுக்கிற தெயவம் பூமியைப் பிளந்து கொடுக்கும்' .என்பது போல் உள்ளது.
-- Source & Courtesy : " The Hindu ". தமிழில்: டி.எம்.சுந்தரராமன்.
-- மஞ்சரி. மார்ச் 2013.
-- இதழ் உதவி: செல்லூர் கண்ணன்   

No comments: