Sunday, March 15, 2015

' எருது '

கேள்வி:  கோளறு  பதிகம்  9 -வது  பாட்டில்  ' பசுவேறும்  எங்கள்  பரமன் '  என்று  சிவபெருமானை  அடியார்  குறிப்பிட்டிருக்கின்றார்.  சிவபெருமானின்
              வாகனம்  'எருது'  என்றல்லவா  சொல்லக்  கேட்டிருக்கிறோம்?
பதில்:     பசு  என்ற  சொல்லுக்குக்  கட்டுப்பட்டது  என்பது  பொருள்.  பச்  என்ற  தாதுவிலிருந்து  பசு  என்ற  சொல்  வந்தது.  ஆகவே,  கட்டுப்பட்ட
             எருதுக்கும்  பசு  என்ற  பெயர்  உண்டு.  எருதும்  கட்டுப்பட்டதுதானே?  ஆனால்,  உலகப்  பெருவழக்கில்  பசு  என்பது  பெண்  இனத்தைக்
             குறிக்கின்றது.  ஆராய்ச்சிப்படி  பசு  என்பது  மாட்டின்  பொதுப்பெயராகும்.
             இராகவன்  என்ற  சொல்  இரகுவம்சத்தில்  வந்தவன்  என்ற  பொருளைத்  தரும்.  தசரதனும்  இரகுவம்சத்தில்  வந்தவன்.  இராமனும்
             இரகுவம்சத்தில்  வந்தவன்.  இலட்சுமணனும்  இரகுவம்சத்தில்  வந்தவன்.  பரதனும்  இரகுவம்சத்தில்  வந்தவன்.  சத்ருக்கனும்  இரகுவம்சத்தில்
             வந்தவன்.  ஆகவே,  எல்லாரும்  இராகவர்கள்தான்.  ஆனால்,  உலகப்  பெருவழக்கில்  இராமனை  மட்டும்  இராகவன்  என்று  கருதுகின்றார்கள்.
             பார்த்தன்  என்ற  சொல்லுக்குப்  பொருள்  பிரதையின்  மகன்  என்பதாகும்.  தருமனும்  பிரதையின்  மகன்தான்.  பீமனும்  பிரதையின்  மகன்தான்.
             அர்ஜுனனும்  பிரதையின்  மகன்.  ஆகவே,  தருமனும்  பார்த்தன்.  பீமனும்  பார்த்தன்.  அர்ஜுனனும்  பார்த்தன்.  ஆனால்,  உலகப்
            பெருவழக்கில்  அர்ஜுனனையே  பார்த்தன்  என்று  குறிப்பிடுகின்றார்கள்.
            இந்த  நியதிப்படி  பசு  என்பது  எருதையும்   குறிக்கும்  என்று  உணர்க.
----' குமுதம்  வினா - விடை '  நூலில்  திருமுருக  கிருபானந்தவாரியார்  சுவாமிகள்.
--  இதழ்  உதவி:  K. கண்ணன்,  செல்லூர். 

No comments: