Tuesday, October 14, 2014

ஆப்பிள் கம்ப்யூட்டர்

முதல் ஆப்பிள் கம்ப்யூட்டர் ரூ,2.32 கோடிக்கு ஏலம் !
     லண்டன்: ஸ்டீவ் ஜாப்ஸும் அவரது நண்பர்களும் சேர்ந்து 1976ம் ஆண்டில் தொடங்கிய ' ஆப்பிள் ' நிறுவனம்தான்,  கம்ப்யூட்டர்  புரட்சியைத் தொடங்கி வைத்தது.  இந்த நிறுவனம், முதலில் ' ஆப்பிள் - 1 ' ரக கம்ப்யூட்டர்களைத் தயாரித்து விற்பனை செய்தது.  முதலாவது ஆப்பிள் - 1  கம்ப்யூட்டரை, ஸ்டீவ் ஜாப்ஸின் நண்பரும் கலிபோர்னியாவைச் சேர்ந்த விஞ்ஞானியுமான ஸ்டீவ் வோர்னியாக் உருவாக்கினார்.  இந்த கம்ப்யூட்டரின் மதர்போர்டு பொருத்தப்பட்டுள்ள மரப்பலகையில், வோர்ஜ்னியாக் கையெழுத்திட்டுள்ளர்.
     ' ஆப்பிள் 01-.0025 ' என்ற எண் கொண்ட இந்த கம்ப்யூட்டரை, இணைய தளம் மூலம் லண்டனின் கிறிஸ்டி ஏல மையம் ஏலமிட்டது.
      ஒருவர், 3.87 லட்சம் டாலருக்கு ( ரூ. 2.32 கோடி ) ஏலம் எடுத்துள்ளார்.  இந்த தகவலை வெளியிட்டுள்ள கிறிஸ்டி மையம், ஏலமெடுத்தவர் பற்றிய தகவல்களை  அறிவிக்கவில்லை.
-- தினமலர் , 12.7.2013.      

Monday, October 13, 2014

கம்ப்யூட்டர் மவுஸ்

கம்ப்யூட்டர் மவுஸ் உருவாக்கிய எங்கல்பார்ட் மரணம்.
     முதல் வீடியோ கான்பரன்ஸ் நடத்தியவர். இன்டர்நெட் தொகுப்புக்கு யோசனை தெரிவித்தவர், ஆராய்ச்சியாளர் டக்ளஸ் எங்கல்பார்ட். 2. 7 .2013 செவ்வாய்க்கிழமை இரவு மரணமடைந்தார்.
     அவருக்கு வயது 88.  அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் ரேடியோ ரிப்பேர் செய்பவரின் மகனாக 1925 ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி பிறந்தவர்.
மவுஸ் தயாரிப்பு.
     1961 ம் ஆண்டு கம்ப்யூட்டர் தொடர்பான ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு திரும்பிவந்ததும், கம்ப்யூட்டர் துறைக்கு உதவியாக சில சாதனங்களை உருவாக்கும் முயற்சியில் எங்கல்பார்ட் ஈடுபட்டார்.
     அப்போது ' கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் எக்ஸ் - ஒய் பொசிஷன் இண்டிகேட்டர் ' கருவியை அவர் டிஸைன் செய்தார்.  அதை தயாரிக்கும் பணியை பில் இங்கிலிஸ் என்ற சக இஞ்சினியரிடம் அவர் ஒப்படைத்தார். கம்ப்யூட்டர் வைக்கும் மேஜைக்கு அடியில் பொருத்தி, முழங்கால் கொண்டு இயக்கும் கருவியாக அது முதலில் தயாரிக்கப்பட்டது.  ஆனால், கடைசியில் டேபிள்டாப் மவுஸ் ஆக அது உருமாறியது.
     1968ம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ நகரில், இன் ஜினியர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாநாட்டில், மவுஸ் கருவியை எங்கல்பார்ட் அறிமுகப்படுத்தி, ஒரு மணி நேரம் செயல்படுத்திக்காட்டினார். அப்போது, 30 மைல் தூரத்தில் இருந்த சக ஆராய்ச்சியாளரின் உருவம் மற்றும் குரலை மாநாட்டு திரையில் காட்டி எங்கல்பார்ட் உரையாடினார்.  இதுவே முதல் வீடியோ கான்பரன்ஸ் ஆகும்.
-- தினமலர் , 5.7.2013.  

Sunday, October 12, 2014

புனுகுப்பூனை.

  அகில், சந்தனம், சாம்பிராணி முதலிய மணப்பொருள்கள் மரங்களில் கிடைப்பன.  கஸ்தூரி, கோரோசனம், புனுகு முதலான மணப்பொருள்கள் விலங்குகளிடம் கிட்டுவன.
     கஸ்தூரி இமயமலைப்பகுதிகளில் உள்ள ஒருவகை மான் வயிற்றில் பெறப்படுவது.  கோரோசனம் பசுவின் வயிற்றில் கிடைப்பது. புனுகு ஒருவகைப்பூனையிடம் சுரப்பது.  புனுகு மிகவும் விசேஷமான மணப்பொருளாகும்.
     புனுகு என்ற பிராணி பூனையைப் போல இருக்கும்.  வாசனைப் பொருளை உருவாக்குவது.  இதன் பிறப்புறுப்பு அருகில் வாலின் கீழ்ப்பக்கம் ஒரு தைலப்பை இருக்கும்.  இந்தப் பையில் தைலம் சுரக்கும்.  அத் தைலத்தை மரத்தில் பீய்ச்சித் தேய்த்துவிடும்.  காட்டுவாசிகள் இதனைச் சேகரிப்பர்.
     நகரில் இதனை வளர்ப்பவர்கள் நடுவில் சுழலும் மூங்கில் அமைந்த கூண்டில் அடைத்து வைப்பர். தைலம் மிகுந்த நிலையில் தைலத்தை மூங்கிலில் பீய்ச்சித் தேய்க்கும்.  அதனை வழித்துப் பத்திரப்படுத்தி உபயோகிப்பர்.  இதுவே புனுகு.  புழுகில் இருந்து இப்படி எடுக்கப்படுவது புனுகு.
-- மானஸதேவதா.  தினமலர். பக்திமலர். ஜூன் 27,2013.

Saturday, October 11, 2014

மெய் எழுத்துக்கள்!

  " பெயருக்கு ஏற்றபடி ஏன் யாரும் நடந்துகோள்வது இல்லை?"
     " மெய் எழுத்துக்களில் வல்லின எழுத்துக்களும் ( க். ச், ட், த், ப், ற்)  ஒரு வகை.  ஆனால், வல்லினம் என்று எழுதினால், அதில், ஓர் எழுத்தேனும் வல்லினமாக இருக்கிறதா பாருங்கள்.  அப்படித்தான் மனிதர்களும் !"
-- சுரா.மாணிக்கம், புதுக்கோட்டை'
-- ஆனந்த விகடன் . 8 . 5 . 2013.                          
பூணூல் போடுவது.
    " பூணூல் போடுவதற்கு குறைந்தபட்ச வயது என்ன?"
      கர்ப்பாஷ்ட மேஷு பிராம்மணா  --  என்று சாத்திரம் கூறுகிறது.  கர்ப்ப வாசத்தை ஒரு வயதாகக் கணக்கிட்டு ஏழு வயதில் எட்டாவது வயதாகக் கணக்கிடுவது கர்ப்பாஷ்டமம் என்று பெயர்.  அதாவது, ஏழாம் வயதில் பூணூல் போடுவது சாலச்சிறந்தது.
-- எஸ்.கே.சாந்தி, வல்லம்.
-- தினமலர். பக்திமலர். ஜூன் 20, 2013. 

Friday, October 10, 2014

பல்புகள்.

புவி ஈர்ப்பு சக்தியால் ஒளிரும் பல்புகள்.!
     நம்ப முடிகிறதா?  புவி ஈர்ப்பு சக்தியால் பல்பை எரிய விட முடியுமா?  நம்பத்தான் வேண்டியிருக்கிறது.  Deciwatt. org  எனும் ஒரு பிரிட்டிஷ் கம்பெனி இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது!  இச்சாதனையை இந்தக் கம்பெனி இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மின்சாரமின்றி இருக்கும் இடங்களில் பயன்படுத்துவதற்காகவே இம்முயற்சியில் ஈடுபட்டு, வெற்றியும் கண்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
     ஒரு டைனமோவை இயக்கி மின்சக்தியைப் பெறுவதற்காக ஒரு மூட்டை மணலை இந்த டைனமோவின் சக்கரத்தில் ஒரு கயிற்றின் மூலம் தொங்கவிட்டால்;  அந்த மணல் மூட்டையின் பாரத்தினால் அந்த டைனமோவின் சக்கரம் சுழன்று, டைனமோவை இயக்கி மின்சாரம் உற்பத்தி செய்யும் இம்மின்சக்தியைக் கொண்டு ஒளிரும் டயோடு  Light Emitting Diode ( Led ) எரியும்.
    இந்த மணல் மூட்டை முழுவதுமாகக் கீழே இறங்கியதும் மூன்றே விநாடிகளில் இம்மூட்டையை மறுபடியும் மேலே இழுத்து விடலாம்.  இம்மாதிரி செய்து வந்தால் 30 நிமிடங்கள் LED பல்புகள் ஒளிரும்.
-- Source with Courtesy: " Times of India "
-- தமிழில்: டி.எம்.எஸ்.  மஞ்சரி. மார்ச் 2013.        
---இதழ் உதவி: செல்லூர் கண்ணன்.  

Thursday, October 9, 2014

உணவில் உப்பாய் ;உதிரத்தில் வெப்பாய்!

M.G.R.  --  மூன்றெழுத்து;
சிவாஜி  --  மூன்றெழுத்து;
ஜெமினி  --  மூன்றெழுத்து;
S.S.R.  --   மூன்றெழுத்து;

இத்துணை  மூன்றெழுத்துகளுக்கும்
இடம்  கொடுத்து...

தன்
தொண்டையில்  --
ஒருசேரக் குடிவைத்திருந்த
ஒரே  மூன்றெழுத்து T.M.S:

' இது  --
உண்மைதானே?' என்று  --  மக்களை
உசாவினால்...

' ஆமாம்! ஆமாம்!'  என்று வரும்
ஆயிரம் ஆயிரம்  S.M.S. !
-- கவிஞர் வாலி
--   ஆனந்த விகடன் . 5 . 6 . 2013.  

Wednesday, October 8, 2014

இந்திய கிரிக்கெட்

" இந்திய கிரிக்கெட்டின் பலம் எது? .. பலஹீனம் எது?"
" பலம் ... ' பேட்டிங்'!
  பலஹீனம்... ' பெட்டிங்' !"
-- சம்பத் குமாரி, திருச்சி.

" எஸ்.எம். எஸ். கலாட்டா " ஒன்று சொல்லுங்களேண்?"
" சமீபத்தில் எனக்கு வந்த எஸ்.எம். எஸ்.  ' முயல் ஓடுகிறது... தாவுகிறது...குதிக்கிறது...சுறுசுறுப்பாக இருக்கிறது.  15 வருடங்கள் வாழ்கிறது.  ஆமை ஓடுவது இல்லை...தாவுவது இல்லை... குதிப்பது இல்லை...ஏன் எதுவுமே செய்வது இல்லை.  150 வருடங்கள் வாழ்கின்றன.  எனவே, ' பி வெட்டி...உவர் லைஃப் இஸ் கெட்டி ' . இது எப்படி இருக்கு?"
-- கே.சரஸ்வதி, ஈரோடு .12.   நானே கேள்வி...நானே பதில் !
--  ஆனந்த விகடன் . 26 . 6 . 2013.