Tuesday, January 21, 2014

ஜில்ஜில் பிரேஸ்லெட்

வந்தாச்சு ஜில்ஜில் பிரேஸ்லெட் .  பிரேஸ்லெட்.:  அணிந்தால் உடம்பு கூலாகும்.
ஏ.சி., ஏர்கூலர் வேண்டாம்.  அமெரிக்க மாணவர்கள் சாதனை.
     அணிந்துகொண்டால் உடம்பையே குளிர்ச்சியாக வைத்திருக்கும் வெப்ப மின்னோட்ட பிரேஸ்லெட்டை அமெரிக்காவில் 4 மாணவர்கள் சேர்ந்து ரிஸ்ட்டிஃபை என்ற கருவியை உருவாக்கியிருக்கின்றனர்.
     அவர்கள் உருவாக்கிய ரிஸ்ட்டிஃபை கருவி, வெப்ப மின்னோட்ட தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.  இயற்பியலில் பெல்டியர் விளைவு என்று ஒன்று உண்டு.  வெவ்வேறு உலோகங்கள் கொண்ட ஒரு சுற்றில் மின்னோட்டம் பாயும்போது உலோகங்களின் ஒரு இணைப்புப்பகுதி வெப்பத்தை வெளியேற்றும்,  இன்னொரு பகுதி வெப்பத்தை உள்ளிழுக்கும்.  அந்த தத்துவம்தான் அவர்கள் கண்டுபிடிப்புக்கு அடிப்படை.
      ரிஸ்ட்டிஃபை கருவி சற்று பெரிய வாட்ச் அளவில் இருக்கும்.  வாட்ச் போலவே மணிக்கட்டில் இதை அணிந்துகொள்ள வேண்டும்.  பெல்டியர் கூலர் எனப்படும் இரண்டு வெவ்வேறு வெப்பக் கடத்திகள் இதில் இருக்கின்றன.  தோல் வெப்பநிலை வழக்கமான அளவில் இருக்கும்போது பெல்டியர் கூலருக்கு வேலை இல்லை.  தோல் வெப்பநிலை அதிகரித்தால், பெல்டியர் கூலர் வேலைசெய்யத் தொடங்கும்.  தோலில் இருக்கும் வெப்பத்தை உறிஞ்சி, தோலுக்குக் குளிர்ச்சியை வழங்கும்.
     உடம்பில் ஏதாவது ஒரு பகுதியைக் குளிரச் செய்தாலே, மற்ற அனைத்து பகுதிகளுக்கும் ஒருசில வினாடிகளில் அந்த குளிர்ச்சி பரவிவிடும்.
     பனிப்பிரதேசங்களில் அதிககுளிரில் இருப்பவரின் உடல் வெப்பநிலை அதிகரித்து, உடலுக்கு சூட்டைக் கொடுக்கவும் ரிஸ்ட்ஃபை கருவியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  சிறிய அளவு லித்தியம் பாலிமர் பேட்டரி உதவியுடன் இது செயல்படுகிறது.
     வீடு, கார், அலுவலகம், தியேட்டர் என நாம் போகிற இடங்கள் எல்லாவற்றிலும் ஏ.சி., ஏர்கூலர் வைக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.  மின் கட்டணம் பற்றியும் கவலைப்பட வேண்டாம்.  குளிரிலும் நடுங்கத் தேவையிருக்காது.  தேவைப்படும் நேரத்தில் உடம்பு தானாக சூடாகும் அல்லது குளிர்ச்சியாக மாறும்.
-- எஸ்.ரவிகுமார்.  பூச்செண்டு
-- ' தி இந்து ' நாளிதழ்.  புதன், நவம்பர் 6, 2013.

No comments: