இந்த உலகின் ஐந்து அடிப்படை அம்சங்கள் நிலம், நீர், காற்று, நெருப்பு, விசும்பு ( வானம் ) ஆகியவை.
-- சூழல் மரபு. உயிர்மூச்சு . டி.கார்த்திக் ஆதி
ஐம்பூதங்களின் அடிப்படையில்தான் இந்தப் பூவுலகும், அதில் உள்ள உயிரினங்களும் தோன்றின என்பது தமிழர் கோட்பாடு. இது அறிவியல்பூர்வமானது. தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம், இதன் அடிப்படையிலேயே இயங்குகிறது. இந்தியத் தத்துவ மரபில் இரண்டு போக்குகளைக் காணலாம். ஒன்று அறிவைப் பரவலாக்குவது. மற்றொன்று அறிவைத் தடை செய்வது. தமிழ் மரபு அறிவைப் பரவலாக்கும் பணியைச் செய்தது. ஐம்பூதங்களின் தன்மையை, இயல்பை ஆராய்ந்த நூல் தொல்காப்பியம். அதனால்தான் தொல்காப்பியருக்கு ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியர் என்று பெயர். மேலும் விசும்பை ( வானம் ) தமிழ் மரபு மட்டுமே ஐம்பூதமாக ஏற்றுக்கொண்டிருந்தது.
-- பேராசிரியர் நெடுஞ்செழியன்.
ஐம்பூதம் என்பது முழுக்கத் 'தமிழ்க் கொள்கைதான். பூ என்றால் பூத்தல். விரிதல் என்று பொருள். சங்க இலக்கியத்தில் பூ என்ற சொல் 33 இடங்களில் வருகிறது.
-- சூழலியல் எழுத்தாளர் பாமயன். ( நிலம் ).
மண்ணுக்கு மேல்தான் உயிர்கள் வாழ்வதாக நினைக்கிறோம். இது தவறு. மண்ணுக்கு மேல் இருப்பதைப் போல அடியில் 100 மடங்கு நுண்ணுயிர்கள் வாழ்கின்றன.
-- அரச்சலூர் செல்வம், இயற்கை விவசாயி. ( நிலம் ).
தூய்மையான தண்ணீர் கிடைக்காமல் ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒரு குழந்தை இறக்கிறது. தண்ணீரை வியாபாரிகள் கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். நம்முடைய நிலத்தில் இருந்து எடுத்த தண்ணீரை, நமக்கே விற்றுக் கோடி கோடியாகத் தனியார் பெரு நிறுவனங்கள் லாபம் பார்த்து வருகின்றன.
--- சூழலியல் எழுத்தாளர் நக்கீரன். ( நீர் ).
காஞ்சிபுரம், சென்னை ஆகிய பகுதிகளில் பாக்கம் என்ற பெயரில் நிறை ஊர்கள் உண்டு. பாக்கம் என்றால் நீர் மிகுந்த பகுதி என்று பொருள். ஆனால் இப்போதோ சென்னையில் எங்கும் தண்ணீர் கிடையாது.
--- பேராசிரியர் சாமுவேல் ஆசிர்ராஜ். ( நீர் ).
நாம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆற்றல் - எரிசக்தி ஆதாரங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் தீர்ந்து போகக் கூடியவை. பெட்ரோல் 29-30 ஆண்டுகளிலும், நிலக்கரி 100 ஆண்டுகளிலும் தீர்ந்து போய் விடக்கூடும். காற்றாலை மின்னுற்பத்திதான் மின்சாரம் குறைந்த சமூகப் பாதிப்பைக் கொண்டிருக்கிறது.
--- பொறியாளர் சி.இ. கருணாகரன். ( நெருப்பு ).
வெப்பம் மனிதர்களுக்கு மிகவும் அவசியம். எப்போது உடலில் வெப்பம் குறைகிறதோ, உடல் சில்லிடுகிறதோ அப்போது மனிதன் இறந்து விடுகிறான். பூமியில் முதன்முதலில் மழை பெய்தபோது மரமே கிடையாது. மனிதர்கள் மரங்களை நடுவதால், தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் நிலையில் இயற்கை இல்லை. அதை மனிதர்களாகிய நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
---திரைப்பட இயக்குநர் ம. செந்தமிழன். ( நெருப்பு ).
நம் அண்டை மாநிலமான கேரளாவில் மணல் எடுக்க முடியாது. ஆனால்,தமிழகத்தில் மணல் வியாபாரிகள்தான் அரசியல் கட்சித் தலைவர்களாக உள்ளனர்.
--- கி.வெங்கற்றாமன், தமிழர் உழவர் முன்னமி ஆலோசகர். ( காற்று ).
பூமியின் சராசரி வெப்ப நிலை 15 டிகிரி சென்டிகிரேடு. இதில் 2 டிகிரி செ.கி. அதிகரித்தாலும் உலகில் பல்வேறு பிரச்னைகள் வந்து விடும். அதைத்தான் புவி வெப்பமடைதல் என்கிறார்கள். புவி வெப்பமடைந்தால் என்னவாகும்? துருவப்பிரதேசங்களில் பனிப்பாறைகள் கரைந்து, கடல் நீர் மட்டம் அதிகரிக்கும். கடலோரப்பகுதிகள் நீரில் மூழ்கும்.
--- சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன், ( விசும்பு - வானம் ).
--- சூழல் மரபு. உயிர்மூச்சு .
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், பிப்ரவரி 11, 2014.