Wednesday, November 11, 2015

குழந்தையைக் கொஞ்சலாம்!

பிறக்கும் முன்னே குழந்தையைக் கொஞ்சலாம்!
     கருவில் இருக்கும் குழந்தையை கொஞ்சி மகிழும் வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது நவீன விஞ்ஞானம்.
     வயிற்றில் இருக்கும் சிசுவின் மாதிரியைக் கொண்டு, குழந்தை பொம்மையை தயாரித்துத் தருகிறது அமெரிக்காவைச் சேர்ந்த 3டி பேபிஸ் நிறுவனம்.
     3டி, 4டி அல்ட்ரா சவுண்ட் தொழில் நுட்பம் மூலம் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையின் உருவத்தை பதிவுசெய்து, அதையே மாதிரியாக வைத்து இந்த குழந்தை பொம்மையை உருவாக்கித் தருகிறது இந்த நிறுவனம்.  இதன் மூலம் தன் குழந்தை வயிற்றில் எப்படி இருக்கும் என்பதும், அதன் முக மற்றும் உடல் அமைப்பு குறித்தும் பெற்றோர்கள் முன்னரே அறிந்து கொள்ளலாம்.  இது மட்டுமல்லாது, பொம்மையின் உடல் நிறம், அளவு ஆகியவற்றை பெற்றோர்களே நிர்ணயம் செய்யலாம்.  20 செ.மீ, 10 செ.மீ என விருப்பமான அளவுகளில் குழந்தை பொம்மையை பெற்றுக் கொள்ளலாம்.
     இந்த 3டி குழந்தையின் மூலம் முன்கூட்டியே குழந்தை வளர்ப்பு அனுபவத்தைப் பெறமுடியும்.  குழந்தையை எப்படி லாவகமாக தூக்குவது, கொஞ்சுவது, பராமரிப்பது என்று பயிற்சி எடுத்து தயாராகலாம்.  எல்லாவற்றுக்கும் மேலாக, 'நீ இப்படித்தான் இருந்தாய்' என பின்னாளில் அக்குழந்தைக்கே நினைவுப் பரிசாகவும் வழங்கவும் முடியும் என்பதால், அமெரிக்கத் தாய்மார்களிடையே பெறும் வரவேற்புப் பெற்றுள்ளன 3டி குழந்தை பொம்மைகள்.
     விரைவில் இந்த சேவையை மற்ற நாடுகளிலும் விரிவுபடுத்த அந்நிறுவனம் முடிவு செய்திருக்கும் நிலையில், கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கண்டறிய தடைவிதிக்கப்பட்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் இப்போதே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
-- பவானி.
-- தினமலர். பெண்கள்மலர். 1-2-2014.  

No comments: