Wednesday, March 9, 2016

ஆவுடையார்கோவில்.

ஆவுடையார்கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்.
கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம்.
     திருப்பெருந்துறை எனச் சைவ சமயத்தில் கொண்டாடப்படும் புகழ் பெற்ற கோவில் 'ஆவுடையார்கோவில்'.  சிவபெருமான் 'ஆத்மநாத சுவாமி' என்ற பெயரில் அருள்புரியும் திருத்தலம்.  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது.  இக்கோயிலைக் கட்டியவர் சமயக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் என்பது புராணம்.  தற்போது அக்கோயிலின் பஞ்சாட்சர மண்டபத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு, கோயிலின் கருவறையையும் கனகசபை மண்டபத்தையும் எழுப்பியவர் மாணிக்கவாசகர் என்பதை உறுதிசெய்திருக்கிறது.
    "வழி வழியாக நாம் கேட்டு வந்த வரலாற்றுக்கான ஆவணமாக இக்கல்வெட்டு கிடைத்துள்ளது.  மண்டபத்தில் காணப்படும் சுமார் 250 கல்வெட்டுகளில் 5 கல்வெட்டுகள் செய்யுளாக வெட்டப்பட்டுள்ளன.  மானிக்கவாசகர்தான் இக்கோயிலைக் கட்டினார் என்பதை அதில் ஒரு செய்யுள் குறிப்பிடுகிறது" என்கிறார் தமிழக அரசின் தொல்லியல் துறை திருச்சி மண்டலப் பதிவு அதிகாரி கோ.முத்துசாமி.
     திருவாசகமும் திருப்பள்ளியெழுச்சியும் இக்கோயிலில் இருந்துதான் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது.  'திருப்பெருந்துறையுறை சிவபெருமானே' என்னு உருகுகிறார் மாணிக்கவாசகர்.  பாண்டியர்களின் துறைமுகங்களில் திருப்பெருந்துறையும் ஒன்று.  மற்றது கொற்கை.
    "மாணிக்கவாசகரின் காலம் 9-ம் நூற்றாண்டு.  ஆனால் பஞ்சாட்சர மண்டபம் 16-ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது.  அதை எழுப்பிய பாண்டியமன்னர்களோ, மற்றவர்களோ மாணிக்கவாசகரின் பங்களிப்பைக் கல்வெட்டாகப் பொறித்து வைத்துள்ளனர்".
     சைவ சமய மரபில் நரியைப் பரியாக்கிய கதை மிகவும் முக்கியமானது.  மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர் மாணிக்கவாசகர்.  குதிரை வாங்குவதற்காக மன்னன் கொடுத்த நிதியைக் கொண்டு சிவபெருமானுக்குக் கோயில் எழுப்பிவிட்டார்.  அது மன்னன் காதுக்குப் போய் கடுமையாக எச்சரிக்கப்பட்டதும், சிவபெருமானின் திருவிளையாட்டால் நரிக்கூட்டம் பரிக்கூட்டமானது என்கிறது திருவிளையாடல் புராணம்.
    "மாணிக்கவாசகர் கோயில் கட்டினார்" என்பது புரானத்தில் மட்டுமே இருந்தது.  அதற்கு ஆதாரமாக கல்வெட்டு செய்யுள் கிடைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
--பூச்செண்டு.
-- 'தி இந்து' நாளிதழ்.  செவ்வாய், பிப்ரவரி 4, 2014. 

No comments: