Tuesday, May 12, 2015

சிலந்திகள்!

 பாலைவனங்களில்  வாழும்  ' டாடெண்டுல்லா '  மாதிரியான  சிலந்திகளில்  ஆண்,  பெண்ணைவிட  சின்னதாய்  இருக்கும்.  பருவ  காலம்  வந்தவுடன்  இந்தக்  குட்டி  ஆண்,  பெரியதொரு  பெண்  சிலந்தியிடம்  தன்  விந்தணுக்களை  எல்லாம்  முதலீடு  செய்யும்.  இப்படி  ஆண்  விந்தணுக்களை  உட்செலுத்தி  முடித்ததும்  அப்படியே  பல்டி  அடித்து  தலையை  முன்னால்  நீட்டும்.  உடனே  பெண்  சிலந்தி  அந்த  ஆண்  சிலந்தியின்  தலையை  கடித்து  சாப்பிட்டுவிடும்!
    ' என்னது ?!  சாப்பிட்டுவிடுமா?  அதுவும்  பெண்  ஆனை  சாப்பிடுவிடுமா?  அதுவும்  கலவி  கொள்ளும்போதா...?  சே,  என்ன  ஒரு  நயவஞ்சகமான  பெண்  சிலந்தி...!  என்று  உடனே  அதை  வைது  வைக்காதீர்கள்.  அதற்கு  முன்னால்  சில  அறிவியல்  தகவல்களை  சொல்லிவிடுகிறேன்.  இந்த  வகை  சிலந்தியை  பொறுத்தவரை,  ஆணின்  ஆயுட்காலம்  மிக  குறைவே.  அவன்  விந்தணுக்களை  வெளியேற்றிவிட்டால்,  அத்தோடு  அவன்  ஜென்ம  பலன்  முடிந்துவிடுவதால்,  அவன்  எப்படியும்  பொட்டென்று  போய்த்தான்  சேருவான்.  இப்படி  அவன்  மாண்டுபோய்  வேறு  எங்கு  விழுந்து  கிடந்தாலும்,  உணவே  கிடைக்காத  இந்த  பாலைவனத்தில்  வேறு  ஏதாவது  ஜீவராசி  அவன்  உடலை  தின்று  அதன்  சக்தியை  பெற்றுவிடும்.  அதற்கு  பதிலாக,  இவனுடைய  சக்தி  அவன்  வாரிசுகளுக்கே  போய்ச்  சேருவது  உசிதம்  ஆகாதோ?  அதனால்தான்  அவன்  அப்படி  பல்டி  அடித்து,  பெண்  லாவகமாக  தன்  தலையைக்  கொய்து  சாப்பிடும்படி  உடலை  வளைக்கிறான்.  எப்படியும்  அடுத்த  சில  கணங்களில்  செத்து  மடியும்  அவன்  உடலை  உட்கொண்டால்,  அவள்  உடல்  மூலமாய்  அவன்  வாரிசுகளுக்குத்தானே  அவன்  சக்தி  போய்ச்  சேரும்.
     அதற்காக,  கலவி  கொண்டிருக்கும்போதே  தின்று  தீர்க்க  வேண்டுமா?  அவன்  வேலையை  முடித்து  கொஞ்சம்  ரிலாக்ஸ்  ஆன  பிறகு  சாப்பட்டால்  ஆகாதா  என்றும்  நமக்குத்  தோன்றலாம்.  இதிலும்  ஓர்  அறிவியல்  விளக்கம்  உண்டு.  ஆணின்  கலவியல்  வேலையை  நிர்ணயிப்பது  அவனுடைய  மூளை  அல்ல,  அவனுடைய  முதுகுத்தண்டு.  அதனால்  தலையே  இல்லாமல்  மூளை  அறுந்து  பிரிந்தபிறகும்  ஆண்  சிலந்தியின்  முண்டம்  மட்டும்  தொடர்ந்து  விந்தணுக்களை  மடமடவென்று  பீய்ச்சி  அடித்துக்கொண்டே  தான்  இருக்கும்.  ஆக  தலை  போனாலும்  அவனுடைய  இனப்பெருக்க  பணியில்  அவன்  மிக  மும்முரமாகத்தான்  இருக்கப்  போகிறான்.  அந்தப்  பணியும்  முடிந்து  அவன்  உடல்  செயலிழந்து  செத்துக்  கிடக்கும்போது,  அதையும்  வாயில்  போட்டுக்கொண்டு  போய்விடும்  பெண்  சிலந்தி.
-- டாக்டர்  ஷாலினி.  ( உறவு  மேம்பட  தொடரில் ).
-- குமுதம்  சிநேகிதி,  டிசம்பர்  1 - 15 ,  2012.
-- இதழ் உதவி:  N.கிரி,  நியூஸ்  ஏஜென்ட் ,  திருநள்ளாறு.  (  கொல்லுமாங்குடி ).   

No comments: