Friday, May 1, 2015

சிதம்பர ரகசியம்

  (  சிறப்பு )   சிதம்பரம்  நடராஜர்  கோயில்  கும்பாபிஷேகம்  01-05.2015 .
பஞ்சபூத  தலங்களில்  ஒன்று
     உலகில்  வாழ்வதற்கு  பெரிதும்  ஒத்திசைவாக  இருப்பதில்  நிலம்,  நீர்,  காற்று,  ஆகாயம்,  நெருப்பு  என்னும்  பஞ்சபூதங்கள்  பெரும்பங்கு  வகிக்கின்றன.  அதில்  திருவாரூர்  தியாகராசர்  நிலதின்  அதிபதியாகவும்,  திருவானைக்காவல்  ஜம்புகேஸ்வரர்  நீருக்கு   அதிபதியாகவும்,  திருக்காளத்தி  காளஹஸ்தீஸ்வரர்  காற்றின்   அதிபதியாகவும்,  திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர்  நெருப்பின்   அதிபதியாகவும்,  ஆகாயத்தின்   அதிபதியாக  சிதம்பரம்  நடராஜ  பெருமானும்  உள்ளனர்.
தரிசிக்க  முக்தி
     திருவாரூரில்  பிறந்தால்  முக்தி,  காஞ்சியில்  வாழ்ந்தால்  முக்தி,  திருவண்ணாமலையை  நினைக்க  முக்தி,  சிதம்பரத்தை  தரிசிக்க  முக்தி,  காசியில்  இறக்க  முக்தி  என்பார்கள்.
உடலின்  அமைப்பு
     மனிதனின்  உருவ  அமைப்பிற்கும்,  தங்கத்தால்  ஆன  நடராஜர்  சன்னதிக்கும்  நிறைய  ஒற்றுமை  இருக்கிறது.  பொன்னம்பலத்தில்  சிவாய  மந்திரம்  பொறிக்கப்பட்டு  வேயப்பட்டுள்ள  21  ஆயிரத்து  600  ஓடுகள்,  மனிதன்  ஒரு  நாளைக்கு  விடும்  சுவாசத்தின்  எண்ணிக்கையைக்  குறிக்கும்.  பொன்னம்பலத்தில்  அடிக்கப்பட்டுள்ள  72  ஆயிரம்  ஆணிகள்,  மனிதனின்  நாடி  நரம்புகளைக்  குறிக்கிறது.  கோயிலில்  உள்ள  9  வாசல்கள்,  மனித  உடலிலுள்ள  9  துவாரங்களை  நினைவுபடுத்துகிறது.  இது  தவிர  ஆன்மிக  ரீதியிலான  அமைப்பும்  உண்டு.  ஐந்தெழுத்து  மந்திரமான  சிவாயநம  என்பதின்  அடிப்படையில்  பொன்னம்பலத்தின்  ஐந்து  படிகளும்,  64  கலைகளின்  அடிப்படையில்  சாத்துமரங்களும்,  96  தத்துவங்களைக்  குறிக்கும்  விதமாக  96  ஜன்னல்களும்,  4  வேதங்கள்,  6  சாஸ்திரங்கள்,  பஞ்சபூத  அடிப்படையில்  தூண்களும்  அமைக்கப்பட்டுள்ளன.
தேரோட்டத்தில்  உலாவரும்  மூலவர்
    சிற்சபையில்  வீற்றிருக்கும்  மூலவரே,  தேரோட்டத்தின்  போது,  உற்சவராக  மாறி  தேரில்  அமர்ந்து  உலா  வருவது,  வெளியில்  வருவது  வேறு  எந்த  ஆலயத்திலும்  காணமுடியாத  ஒன்றாகும்.
10  தீர்த்தக்  குளங்கள்
       மூர்த்தி,  தலம்,  தீர்த்தம்  மூன்றாலும்  சிறப்பு  பெற்றதுடன்,  10  தீர்த்தங்கள்  உள்ளது  இத்தலம்.  
     இங்குள்ள  ஆயிரங்கால்  மண்டபத்தில்தான்,  சேக்கிழார்  பெரியபுராணம்  பாடி  அரங்கேற்றினார்.  இத்தலத்தில்  உள்ள  முருகப்பெருமானை  தனது  திருப்புகழில்  பாடியுள்ளார்,  அருணகிரிநாதர்.  
-- தொகுப்பு :-  நெய்வாசல்  நெடுஞ்செழியன்.
-- தினத்தந்தி.  அருள்தரும்  ஆன்மிகம்  இணைப்பு.  28-4-2015.
-- இதழ்  உதவி:  மு. விஷ்ணுவர்த்தன்,  திருநள்ளாறு. 

No comments: